இரவும் வரும் பகலும் வரும்

நாட்களில் திறந்திடும் அணைகள்
நடந்தசைந்து வரும் நீர்துளிகள்
விலையேற காத்திருக்கும் உரங்கள்
விரைந்து கலந்திடும் கழிவுகள்
எடுத்து குடித்திடும் நகரங்கள்
ஏக்கத்தில் காய்ந்திடும் வயல்கள்
வாடிக்கையென கடந்திடும் வருடங்கள்
வார்த்தைகளை மாற்றின கவிதைகள்

02/10/2016

வண்டலும் உருண்டு வரும்
கற்களும் பெருத்து வரும்
மேனியை குளிரூட்ட வரும்
வண்டியை மெருகூட்ட வரும்
அப்புறம் பயிராக்க வரும்
எத்தனை நாட்கள் வரும்?

20/09/2015

 

 

ஆனைமலை

கதிரவன்தழுவும் செந்நிறத்தானை
அமர்ந்துபார்க்கும் நமச்சிவாயனை
கடம்பவனத்தின் காவல்யானை
கடப்பவர்க்குப் பாறையிலானை!.

வாழ்க்கைப்படிகள்

மலைப் பாதையில்
ரேகைகளாய் பிரிவுகள்
இணைப்புகளை அறிய
முக்காலும் தேய்ந்துவிடும்
முகங்களும் ரேகையிடும்!.
வொருவழிப்பாதை விருப்பங்கள்
சிலபடி இறங்கினால்
தெரியும் வொருகுளம்
அலையாத நீரில்தெரியுமுன்
முகம்காட்டு மதன்குணம்!
மற்றொன்றோ படிகட்டுகள்
யாரோகட்டி வைத்தவை
கண்மூடியும் கால்செல்லும்
விருப்பங்கள் கட்டியகைகளில்
அலையலையாய் மனிதர்கள்!
மற்றவை அனைத்தும்
பாதைகளல்ல பயணிக்க…!.

முக்கனிச் சாலை

அன்றாடம் அதிகாலையில் மெதுவாக நடக்கும் மனிதர்களுக்காக இரு குறும்பாலங்கள் அந்நகரத்தில் இருந்தன. பலவண்ண நடைகளை குறும்பாலங்களும் தினமும் பார்த்துக் கொண்டிருந்தன. வயோதிகர்களும் வியாதிகளுக்காக நடப்பவர்களும் குறும்பாலத்தையும் அதன் கீழ் தெரியும் மணற்பரப்பையும் பார்த்த படி நடந்து கொண்டிருப்பார்கள். உடலைப் பேண வேண்டும் என்ற எண்ணத்தோடு நடப்பவர்களின் எண்ணிக்கை அச்சமயம் பாலத்தில் கடக்கும் பேருந்துகளை விட குறைவாகத்தான் இருக்கும். தென்னகத்து தலைவிதி என்று தோன்ற வைக்கும் கருமையில் அச்சிடப்பட்ட மஞ்சள் நிற சுவரொட்டிகள் அங்கிருக்கும் விளக்கு கம்பங்களை அலங்கரித்துக் கொண்டு அதில் இருக்கும் வாசகத்தைப் படிப்பவர்களை வா அருகில் வா யென்று அழைக்கும். அவற்றை சுவர்களில் ஒட்டியிருந்த திரைப்படச் சுவரொட்டிகள் ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தன. சுவர்களின் சொந்தக்காரர்களுக்கு ஏன் வாடகை எதுவும் தருவதில்லை என்று பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகை கேட்டது. என்னை ஒட்டியவர்கள் எவ்வளவு தந்தார்கள் தெரியுமா? என்று ஆச்சரியத்தையும் சேர்த்து அவிழ்த்து விட்டது. அவிங்களே கேக்கல உனக்கென்னப்பு…. ஒட்டுனத மட்டும் காட்டு… என்றது ஒரு படத்தின் சுவரொட்டி. தொலைக்காட்சியின் நிகழ்ச்சியைப் பற்றிய திரைகள் உங்களுக்கு அப்புறம் வந்தேன் இப்ப எப்படி நிக்கிறேன் பார் என்று அலட்சியமாக சொல்லிக் கொண்டு நின்று கொண்டிருந்தது வண்ணமயமாக. சுவரொட்டிக்கு கொஞ்சம் ஆத்திரம் வந்திருக்க கூடும். கதாநாயகனின் முகம் சிவந்து கிடந்தது. இவையனைத்தையும் சட்டையேதும் செய்யாமல் வரிசையாக மரக்கட்டைகளால் கட்டப்பட்டு வாழ்த்துகளை தமிழில் டிசைன் டிசைனாகக் கூறும் வாழ்த்துக்கட்டைகள் நின்று கொண்டிருந்தன. இதற்கு ஏன் பிளாஸ்டிக்கோ பரிசோதனைக்கூடத்தில் விளையும் மக்காத விளைபொருட்களோ உபயோகிப்பதில்லை என்று தாங்கிக் கொண்டிருக்கும் தரையும் பக்குவமாக சிந்தித்து தனக்குத்தானே கேள்விகளை கேட்கத் தொடங்கியது. ஒரு தடவை குழி தோண்டி வாழ்த்துகள் சொல்லி விட்டால் உயிர் இருக்கறவரைக்கும் உயிரோடு இருக்கும்.. என்று மெல்லக் கேட்டது. மெதுவாக நடந்து வந்த பசுவிற்கு கேட்டு விட்டது. நாங்க திங்கிறது பிடிக்கலையா?…. இதக்கேட்டு அவிய்ங மக்காத போஸ்டர அடிச்சா அப்புறம் வைக்கோலையும் இறக்குமதி பண்ண வேண்டியுருக்கும் பாத்துக்கோ… அப்புறம் உங்க ஆத்தா இந்தியத்தாயிக்கு வந்த சோதனையைப் பாரீர்ன்னு ஒரு குழிய தோண்டி போஸ்டர நடுவாய்ங்க பரவாயில்லயா….இப்படி போஸ்டருக்கு போஸ்டருன்னு துளைச்சும் அவிங்களுக்கு எடுத்து கொடுக்குற….துப்புன எச்சிய வைச்சு முகத்த துடைச்சோமா…. பெய்ஞ்ச மலயில நனஞ்சு குளிச்சோமான்னு இருக்கனும்… இந்தா மூஞ்சிய கழுவிக்கோ என்று கோமியத்தை சிந்திக் கொண்டே சென்றது. இவைகளின் கவனத்தை கலைத்தபடி வேகமாக ஒரு கார் சாலையில் திரும்பியது. ராஜனின் கார் தான் என்று பார்த்தவர்கள் சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் காரின் கண்ணாடிகளில் மெல்லிய கோடுகளால் கோலம் போட்ட மாதிரி எழுதியிருப்பார். அந்நகரத்தின் கொடையாளர்களில் ஒருவர். அவரிடம் சிலசமயங்களில் கதைவிட்டு கறப்பவர்களும் இருக்கிறார்கள். அதுவும் துதியில் தொடங்கி சுயபுராணத்தில் முடிக்கும் தருமிகளுக்கு சன்மானம் வழங்கி கௌரவிப்பார். பாராட்டை வேண்டி வந்தவர்கள் சன்மானத்தைக் கண்டு திளைத்துபோவதுண்டு. எதுஎப்படியோ பெயருக்கேற்றார் போல் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ராஜனின் கார் வேகமாக குறும்பாலத்தைக் கடந்து மாபலாவாழை சாலையில் திரும்பியது. அந்நகரத்திற்கு அழகாக ஒரு துணைநகரம் இருந்தது. நகரத்தின் கலையரங்கம் போல் எப்பொழுதும் களைகட்டியிருக்கும். முக்கனிச் சாலை துணைநகரத்தின் நுழைவாயில். பெயருக்கேற்றார் போல் மரங்கள் சூழ்ந்து குளுமையாக இருக்கும். மனது சரியில்லையென்றால் ராஜன் காரில் வேகமாக வந்து நிறுத்திவிட்டு இச்சாலையில் மெதுவாக நடக்க ஆரம்பித்துவிடுவார். காலையில் மரங்களின் துளைத்து வரும் கதிர்கள் அவரின் கவலைகள் துளைத்துக் கொண்டு போய்விடும். இன்றும் அப்படிதான். பாரத்தை இறக்கிவிட்டு பாட்டு ஒன்று பாடிக்கொண்டே வீட்டிற்கு திரும்ப ஆரம்பித்தார். முக்கனி சாலையின் சிக்னலுக்கருகே ஒரு பேருந்து நிறுத்தம். சிக்னல் விழுந்தும் பேருந்தின் அணிவகுப்பால் அவரின் கார் செல்ல முடியவில்லை. மொதல்ல இந்த பேருந்து நிறுத்தத்த மாத்தனும் என்று மனதினில் சொல்லிக்கொண்டார். அப்புறம் அதை அடியோடு மறந்துவிட்டார். வேலைப்பளுவும் அவரை ஒரு வாரம் போட்டு ஆட்டியது. துணைநகரத்தில் இருக்கும் கோவிலுக்கு போகலாம் என்று முக்கனி சாலையில் திரும்பும் போது தான் கவனித்தார். பேருந்து நிறுத்தம் இடம் மாறியிருந்தது. கோவிலுக்கு போய்விட்டு வந்து விசாரிக்க ஆரம்பித்தார். நிறைய பேர் இதப்பத்தி புகார் தெரிவிச்சு இருந்தாங்க ராஜன்…. என்னாச்சுன்னு தெரியல உடனே மாத்தனும்னு ஆர்டர் வந்துருச்சு… அதான் மாத்திட்டோம்… என்றார் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஒர் அதிகாரி. மனதும் அதற்குமேல் குழம்புவதற்கு வழியில்லையென்று வேறுவிசயங்களை அசை போட ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்தும் இதைப்பற்றி மூச்சுவிடவில்லை. ஆனாலும் மனதின் மூலையில் உட்கார்ந்து கொண்டு சிலசமயம் எட்டிப் பார்ப்பதுண்டு. மீண்டும் ஒரு சிறுபிரச்சனை அழகுராசாவால் வந்தது. எப்பொழுதும் அழகு அச்சமயம் யார் வலியவர்களோ அவர்களுக்கு துணைபோவான். எப்படி வந்து ஒட்டுவான்… ஓட்டுவான்… ஓடுவான்… என்று யாருக்கும் தெரியாது. கொஞ்சும் தமிழில் விளையாடுவான். யார் சொன்னது நிலவின் முதுகு ரகசியம் என்று ஆச்சரியகுறிய போட்டுக்கோ இதோ கைவைத்து விட்டு வந்திருக்கிறேன் இன்று அதே ஆச்சரியகுறிய இன்னோருதபா போட்டுக்கோ என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பான். யாருப்பா அது என்று அப்பாவிகள் யாரும் கேட்டுவிட்டால், புத்தகத்தில வாசிச்சேன் பிடிக்கலையா? புரியலையா?… பிடிக்கலைனா இன்னோரு கவிதையிருக்கு வடமொழியில சொல்லவா….என்பான். இப்படி பேசியே சாட்டையாய் மாறி கேட்பவர்களை பம்பரமாக்கி விடுவான். கிசுகிசுகளை வைத்து கிச்சு கிச்சு மூட்டுவதில் தன்னிகரற்றவன். வழக்கம் போல ராஜனின் கடைக்கு வந்து கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தான். ஒரு கிசுகிசுவிற்கு ராஜன் கொஞ்சம் பலமாக சிரித்துவிட்டார். கிசுவின் நாயகன் உள்ளூர் அரசியல் புள்ளி. கிசுவின் நாயகி பக்கத்தூர் புள்ளிமான். உலகனாதனும் சிரிக்கும் போது சங்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சங்கம் கலைந்தது. விசயம் வீண் புரளியானது. அன்று கடைக்கு வாங்க வருபவர்களை விட, சொறிந்து சிரங்காக்க வந்தவர்கள் ஏராளம். கக்ககக்கன்னு சிரிச்சீங்களாம்….. ஏதோ அந்த அ.பு. மேல காட்டுகடுப்புல இருக்கீங்களாம்……என்று எக்கச்சக்க விசாரிப்புகள். தர்மசங்கடமாய் போய்விட்டது ராஜனுக்கு. சொன்னவனைக் காணவில்லை. கேட்டு சிரித்தவனை துவம்சம் செய்தது உலகம். ராஜனும் அவன் வாய் கிழிஞ்சா தான் திருந்துவான்… என்று சொல்லி விட்டு வழக்கம் போல முக்கனி சாலைக்கு சென்றுவிட்டார். அதைச் சொல்லும் போது உலகனாதன் பின்னால் தெருவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான். அழகுவின் வீட்டில் ஒரே ரணகளம் தான். ராஜன் அழகின் பல்லைப் உடைக்க போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பல்லு மட்டும் பேந்ததுன்னு வையி… அப்புறம் பாரு… என்றான் அழகு. அடிபொடிகளிடம் இருந்து, ராஜன் முக்கனி சாலைக்கு வந்து சோகமாக நடந்துபோய் விட்டு கொஞ்சம் நேரம் கழித்து திரும்பும் போது சந்தோசமாக பாட்டு பாடிக்கொண்டே சென்றார் என்ற தகவல் வந்தது. அழகின் மனம் சந்தோசத்தில் திளைத்தது. ஒரு கிசு சிக்கிவிட்டது. யார் அந்த தொடரும் கிசு…. அவனின் மண்டையை அரித்தது. சொறிந்ததில் விடிய ஆரம்பித்தது. முதல் வேலையாக முக்கனிச் சாலைக்கு சென்றான். கொஞ்ச தூரம் நடந்திருப்பான். யார்கிட்ட விசாரிக்கலாம் என்று ஒரு தென்னைமரத்தின் கீழ் நின்று கொண்டு  சாலையின் இருபுறமும் பார்த்துக் கொண்டிருந்தான். பறவையின் எச்சம் சட்டையில் விழுந்தது. இவன்மேலே பார்க்க, இவன் முகத்தைப் பார்த்த பறவை பயந்து பறக்க, அதிர்வில் காய்ந்து கருகிக் கொண்டிருந்த வயதான இளநீர் விழ கச்சிதமாக நடந்தேறியது பல் உதிரும் படலம். வீட்டிற்கு வந்தவுடன், நாலு பல்லு போச்சு… என்றான். ஆஹா கொஞ்சம் பெரிய கையா?… பேத்துட்டாய்ங்களா… ஆளு எப்படியிருந்தா…. அம்சமா இல்லை குரங்கா…..என்று கேட்டது அடுப்படியில் இருந்து ஒரு குரல். என்னாச்சு என்று கேட்பவர்களிடம் அழகும் கதை விட ஆரம்பித்தான். விசயம் உள்ளூர் சாமியாடி காதுக்கும் போனது. ஆடி போய்விட்டாள். ஆத்தாவுக்கு ஏதும் குறை வைச்சேனா?… போட்டிக்கு ஆள் வருது… என்று ஆத்தா படத்தின்முன் பதற ஆரம்பித்தாள். பக்கத்தூர் அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை வேறு சென்று வந்தாள். அதற்கப்புறம் அழகு, ராஜனைப் பார்க்கும் போதெல்லாம் கையை வைத்து வாயை மூடிக் கொள்வான். விசயம் அரைகுறை அடிபொடிகளால் காட்டுத்தீ போல் பரவியது. முக்கனி சாலையில் திடீர் மரத்தடி கோவில்கள் முளைக்க ஆரம்பித்தன. மக்கள் வந்து கண்மூடித்தனமாக பிராத்தனைகளை அடிக்கிக் கொண்டிருந்தனர். ராஜன் கோவிலுக்கு போவதென்றால் கூட முக்கனிச் சாலையை தவிர்த்து விட்டு வேறு சாலையை உபயோகிக்க ஆரம்பித்தார். பிராத்தனை கூட்டங்களும் வழிபாடுகளும் கதைகட்டத் தொடங்கின. அழகுவின் அடிபொடிகள் ராஜனைப் பார்க்கும் போதெல்லாம், பச்சமண்ணு அவன்…. எப்படி சிரிச்சுக்கிட்டே பாடுவான்ன் தெரியுமா… சிரிச்சுக்கிட்டே பாடுவான்னா?…. ஆமா…. கெட்டபுத்தி போகுதான்னு பாரு…. ஆமா போகுது…. என்று ஜாடையில் வசை பாட ஆரம்பித்தனர். இப்போதெல்லாம் அழகு சிரிக்கும் போது அழகாக தங்கப்பற்களும் கூடச் சேர்ந்து சிரிக்கும். பழைய பற்களை விட இது அம்சமாகத்தான் இருந்தது. ஒருவழியாக முக்கனிச்சாலை அமைதியையும் குளுமையையும் இழந்து கற்பூர வாடையிலும் கடைகளின் இரைச்சலிலும் மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்க்கும் போதெல்லாம் ராஜனின் மனதும் கலங்கி கண்களும் கண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடும். பறவைகள் பறந்து கொண்டும் மந்திகள் தாவிக் கொண்டும் பழங்கள் உதிர்ந்து கொண்டும் இருந்து கொண்டிருக்கிறது முக்கனிச் சாலையில் இன்றுவரை. சாமியாடியும் வெள்ளிக்கிழமை தவறாது முக்கனி சாலையில் வந்தமர்ந்து குறைகளை கேட்க ஆரம்பித்தாள். இப்போதெல்லாம் தருமிகளும் விஷமிகளும் ராஜனைப் பார்க்க வருவதில்லை. குடும்பத்திற்கு ஒரு விதத்தில் அது நிம்மதியை அளித்தது. மழைக்காலமும் வந்தது. தரையும் குளிக்க ஆரம்பித்தது. முக்கனி சாலையும் அமைதியாக நனைத்து கொண்டிருந்தது. ராஜனும் முக்கனிசாலைக்கு வந்து காரை விட்டு இறங்காமல் சாலை அமைதியாக நனைவதை ரசிக்க ஆரம்பித்திருந்தார்.

கண்ணன் தமிழ்

தூக்கம் வந்து நெடிலை குறிலாக்கினாலும்
துயரம் எதுமில்லை! கொம்பும் முளைப்பதில்லை!
தவறாய் தெரிந்து கண்களை உருட்டினாலும்
பயமும் வருவதில்லை! கண்ணன் மாறவில்லை!
நிறத்தை திரித்து கண்போல் காட்டினாலும்
தாக்கம் குறையவில்லை! பார்வை அகலவில்லை!.