மாறிவிடு… மாற்றிவிடு…

இவ்விரு வார்த்தைகள் இருநாட்களாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கள்ள நோட்டுகளைத் தடுக்க, கருப்பு பணத்தை ஓழிக்க வேன்டும் என்பதற்காக மத்திய அரசாங்கம் திடீரென்று ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. உடனடியாக செல்லக்கூடிய பணத்தாள்கள் புழக்கத்தில் இல்லாததால் சாதாரண மக்கள் பலவகையான இன்னலுக்கு உள்ளாகினர். கடைவீதிகள் எல்லாம் தீபாவளிக்குப் பிந்தைய நாட்களைப் போல் வெறிச்சோடியிருக்கிறது. தற்காலிக சோகம் அனைவரின் முகத்திலும் தெரிந்து கொண்டிருக்கிறது. கட்டு கட்டுகளாக அடுக்கி வைத்திருந்த பணத்தின் மதிப்பு வருட வருமானத்தின் மதிப்பாக குறைந்து விட்டது. அதுவும் வருமானவரி கட்டுபவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. மற்றவர்கள் வருமானவரி செலுத்த நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். பதுக்கி வைக்கப்பட்டிருந்த, மக்களின் கைகளை தீண்டாத பணம், மீண்டு அரசாங்க அதிகாரிகளின் கைகளை தீண்டும் பாக்கியத்தை பெறப் போகிறது. “டிஜிட்டல் இந்தியா” என்ற மாற்றத்திற்கான மாபெரும் முயற்சி என்று மத்திய அரசாங்கம் பல இடங்களில் மறைமுகமாகவும், சில இடங்களில் நேரிடையாகவும் அறிவித்து கொண்டிருக்கிறது. முடிந்தவரையில் இணையம் மூலமாகவும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்டுகள் மூலமாகவும் பரிவர்த்தனை நிகழ வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கம் மக்களிடம் விதைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. சில்லரை வணிகத்தில் ஈடுபடும் அனைவரும் வங்கி கணக்குகளில் சேமிக்க நிர்பந்திக்க பட்டு இருக்கிறார்கள். வங்கி கணக்கென்பது மானியத்துக்கு மட்டுமல்ல என்ற குட்டு மக்களின் தலையில் வைக்கப் பட்டிருக்கிறது.

தேர்தலின் விளைவாக மேற்கத்திய நாடுகளின் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பளித்து இருக்கிறார்கள். எப்பொழுதும் அவர்களால் நமக்கு விலையெற்றம் நிகழும். இப்பொழுது, இந்தியர்களால் விலையெற்றம் நிகழ்ந்திருக்கிறது. பங்கு சந்தையும் மிகப்பெரிய சரிவில் இருந்து தற்காலிகமாக தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு, கட்டுகளால் கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்க்க முயற்சித்து இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா அதிகரிக்கப் போகிறது. இதுபோன்ற விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எது எப்படியோ? நல்ல எதிர்காலத்திற்காக, தைரியமாக இன்று களையெடுக்க முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் நடைமுறையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனப் பார்க்க, கையில் இருந்த சில நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு சென்றேன். ஒவ்வொரு முறையும் இரு வெள்ளைத்தாள்களை (விண்ணப்படிவம் + அடையாள அட்டையின் நகல்) செலவளித்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொத்தமாக 50கோடி மாற்றங்கள் நிகழ்ந்தால் 100கோடி தாள்கள் வீணாகப் போகின்றது.

அனைவரும் டெபிட் கார்டுகளை உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், மாதவருமானம் வாங்குபவர்களின் செலவளிக்கும் முறை மற்றவர்களுக்கு ஒத்துவருமா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எவ்வகையான விளைவுகளை தரப்போகிறது என்று பார்த்தால், திட்டமிட்டு, வாங்க வேண்டிய பொருட்களை, அதற்கு தேவையான பணத்தைக் கொண்டு வாங்கும் மக்கள் குறைந்து விடுவார்களோ? என்ற பயமே வருகிறது. அனைவரும் கார்டுகளைக் கொண்டு பொருட்களை வாங்க ஆரம்பிக்கும் போது, ஆசைகளும், ஆவலைத் தூண்டும் விளம்பரங்களும் மக்களின் பணத்தை வேகமாக கரைக்கப் போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரசாங்கத்திற்கு மக்களின் மேல் அக்கறை இருந்தால் மாதச்சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் கிரெடிட் கார்டு விநியோகிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும், ஒருவர் ஒரு கிரெடிட் கார்டு மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் கொண்டு வர வேண்டும். வங்கி கணக்கு மட்டுமின்றி அனைத்து கிரெடிட் கார்டுகளிலும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும். பான் எண் இல்லாதவர்களின் கிரெடிட் கார்டை தடை செய்ய வேண்டும். பொருளை இன்று தந்து, அதற்கான பணத்தை நாளை மறைமுக வட்டியுடன் வாங்கிக் கொள்ளும் முறையை மாதச்சம்பளம் வாங்காதவர்களிடம் வங்கிகள் திணிப்பதை அரசு தடுத்திட வேண்டும். டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் கலந்து ஆலோசிக்கும் போது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், சாதாரண மக்களை சென்று அடையும் போது அவர்களின் பணத்தை காக்கும் காவலானாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இடப்படும் கைவிலங்காக இருந்திடக் கூடாது. திட்டமிட்டு பட்ஜெட் போடும் அரசாங்கம், பணத்தை வங்கிகளில் சேமியுங்கள், சேமித்த பணத்தை எடுத்து திட்டமிட்டு செலவளியுங்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும். வங்கிகள் தனிநபர் கடன் வழங்கும் போது, கடன் தொகைக்கு ஈடான தொகை எல்.ஐ.சியில் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். காப்பீட்டு தொகையை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் தந்தால், வருங்காலத்தில் இழப்பும் வாராக்கடனின் சுமையை காப்பீட்டின் மூலம் ஓரளவு குறைக்க முடியும். வங்கிகளின் பேராசையாலும் மற்றும் அதிகார மையங்களின் வற்புறுத்தலாலும் வங்கிகளுக்கு வரும் இடர்களின் விளைவு, வங்கியில் பணத்தை சேமித்தவர்களின் தலைகளில் இறங்காமல் இறைவன் தான் காக்க வேண்டும்.

இனிதாய் அருள்வாய்!