மாறிவிடு… மாற்றிவிடு…

இவ்விரு வார்த்தைகள் இருநாட்களாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கள்ள நோட்டுகளைத் தடுக்க, கருப்பு பணத்தை ஓழிக்க வேன்டும் என்பதற்காக மத்திய அரசாங்கம் திடீரென்று ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. உடனடியாக செல்லக்கூடிய பணத்தாள்கள் புழக்கத்தில் இல்லாததால் சாதாரண மக்கள் பலவகையான இன்னலுக்கு உள்ளாகினர். கடைவீதிகள் எல்லாம் தீபாவளிக்குப் பிந்தைய நாட்களைப் போல் வெறிச்சோடியிருக்கிறது. தற்காலிக சோகம் அனைவரின் முகத்திலும் தெரிந்து கொண்டிருக்கிறது. கட்டு கட்டுகளாக அடுக்கி வைத்திருந்த பணத்தின் மதிப்பு வருட வருமானத்தின் மதிப்பாக குறைந்து விட்டது. அதுவும் வருமானவரி கட்டுபவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. மற்றவர்கள் வருமானவரி செலுத்த நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். பதுக்கி வைக்கப்பட்டிருந்த, மக்களின் கைகளை தீண்டாத பணம், மீண்டு அரசாங்க அதிகாரிகளின் கைகளை தீண்டும் பாக்கியத்தை பெறப் போகிறது. “டிஜிட்டல் இந்தியா” என்ற மாற்றத்திற்கான மாபெரும் முயற்சி என்று மத்திய அரசாங்கம் பல இடங்களில் மறைமுகமாகவும், சில இடங்களில் நேரிடையாகவும் அறிவித்து கொண்டிருக்கிறது. முடிந்தவரையில் இணையம் மூலமாகவும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்டுகள் மூலமாகவும் பரிவர்த்தனை நிகழ வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கம் மக்களிடம் விதைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. சில்லரை வணிகத்தில் ஈடுபடும் அனைவரும் வங்கி கணக்குகளில் சேமிக்க நிர்பந்திக்க பட்டு இருக்கிறார்கள். வங்கி கணக்கென்பது மானியத்துக்கு மட்டுமல்ல என்ற குட்டு மக்களின் தலையில் வைக்கப் பட்டிருக்கிறது.

தேர்தலின் விளைவாக மேற்கத்திய நாடுகளின் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பளித்து இருக்கிறார்கள். எப்பொழுதும் அவர்களால் நமக்கு விலையெற்றம் நிகழும். இப்பொழுது, இந்தியர்களால் விலையெற்றம் நிகழ்ந்திருக்கிறது. பங்கு சந்தையும் மிகப்பெரிய சரிவில் இருந்து தற்காலிகமாக தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு, கட்டுகளால் கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்க்க முயற்சித்து இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா அதிகரிக்கப் போகிறது. இதுபோன்ற விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எது எப்படியோ? நல்ல எதிர்காலத்திற்காக, தைரியமாக இன்று களையெடுக்க முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் நடைமுறையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனப் பார்க்க, கையில் இருந்த சில நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு சென்றேன். ஒவ்வொரு முறையும் இரு வெள்ளைத்தாள்களை (விண்ணப்படிவம் + அடையாள அட்டையின் நகல்) செலவளித்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொத்தமாக 50கோடி மாற்றங்கள் நிகழ்ந்தால் 100கோடி தாள்கள் வீணாகப் போகின்றது.

அனைவரும் டெபிட் கார்டுகளை உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், மாதவருமானம் வாங்குபவர்களின் செலவளிக்கும் முறை மற்றவர்களுக்கு ஒத்துவருமா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எவ்வகையான விளைவுகளை தரப்போகிறது என்று பார்த்தால், திட்டமிட்டு, வாங்க வேண்டிய பொருட்களை, அதற்கு தேவையான பணத்தைக் கொண்டு வாங்கும் மக்கள் குறைந்து விடுவார்களோ? என்ற பயமே வருகிறது. அனைவரும் கார்டுகளைக் கொண்டு பொருட்களை வாங்க ஆரம்பிக்கும் போது, ஆசைகளும், ஆவலைத் தூண்டும் விளம்பரங்களும் மக்களின் பணத்தை வேகமாக கரைக்கப் போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரசாங்கத்திற்கு மக்களின் மேல் அக்கறை இருந்தால் மாதச்சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் கிரெடிட் கார்டு விநியோகிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும், ஒருவர் ஒரு கிரெடிட் கார்டு மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் கொண்டு வர வேண்டும். வங்கி கணக்கு மட்டுமின்றி அனைத்து கிரெடிட் கார்டுகளிலும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும். பான் எண் இல்லாதவர்களின் கிரெடிட் கார்டை தடை செய்ய வேண்டும். பொருளை இன்று தந்து, அதற்கான பணத்தை நாளை மறைமுக வட்டியுடன் வாங்கிக் கொள்ளும் முறையை மாதச்சம்பளம் வாங்காதவர்களிடம் வங்கிகள் திணிப்பதை அரசு தடுத்திட வேண்டும். டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் கலந்து ஆலோசிக்கும் போது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், சாதாரண மக்களை சென்று அடையும் போது அவர்களின் பணத்தை காக்கும் காவலானாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இடப்படும் கைவிலங்காக இருந்திடக் கூடாது. திட்டமிட்டு பட்ஜெட் போடும் அரசாங்கம், பணத்தை வங்கிகளில் சேமியுங்கள், சேமித்த பணத்தை எடுத்து திட்டமிட்டு செலவளியுங்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும். வங்கிகள் தனிநபர் கடன் வழங்கும் போது, கடன் தொகைக்கு ஈடான தொகை எல்.ஐ.சியில் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். காப்பீட்டு தொகையை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் தந்தால், வருங்காலத்தில் இழப்பும் வாராக்கடனின் சுமையை காப்பீட்டின் மூலம் ஓரளவு குறைக்க முடியும். வங்கிகளின் பேராசையாலும் மற்றும் அதிகார மையங்களின் வற்புறுத்தலாலும் வங்கிகளுக்கு வரும் இடர்களின் விளைவு, வங்கியில் பணத்தை சேமித்தவர்களின் தலைகளில் இறங்காமல் இறைவன் தான் காக்க வேண்டும்.

இனிதாய் அருள்வாய்!

நாடகமொன்று கண்டேன்….

நாடகம் நடந்து கொண்டிருந்தது
பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்ட இடத்தில் தொடங்கி
காலியான இருக்கைகள் நிறைந்த அறைவரையில்!
உருவத்தை மாற்றாமல் பாத்திரங்கள் மாறின…
கேள்விகளும் பதில்களும் பல்லாங்குழி ஆடின
வேடிக்கை பார்த்த காலமும் மயங்கி
அவளின் பின்னாலே அலைந்தது…
காலத்துடன் கண்களும் கைகோர்த்துக் கொண்டது
இலக்கண இலக்கியத்துக்கு அங்கு வேலையில்லை
எதனைக் கண்டான் நாடகம் படைத்தான் என
யாரும் சொல்லியிருக்கிறார்களா!
தெரியவில்லை! தெரிய விரும்பவில்லை
நாடகம் நடந்து கொண்டிருக்கிறது ….

அலைகள்

படிப்பது உணர்ந்திட வாய்ப்பில்லை என்பது போல
எழுதவில்லை என்றால் வாழ்ந்திடும் ரகசியம் போல
எழுந்துவரும் பூதங்களை அடக்க முடியாதது போல
எழுந்துவரும் புலனினை அடக்க முடியாது போல!.

கவர்தல்

கவர்தல் என்பதை, தெரிந்த நன்றாக புரிந்த ஒன்றை மனதில் பதித்து, தக்க சமயத்தில் தமக்குரிய நடையில் வெளிப்படுத்துதல் என்றும் கூறலாம். தெரிந்தும் தெரியாமலும் என இருவகையாக கவர்தல் நிகழும். மிகவும் பிடித்த பிரபலங்களின்/அன்பர்களின் நடை உடை பாவனைகள் பலரை எளிதில் கவரும். ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில்லதை அனைவரின் முன்பாக அதை வெளிப்படுத்துவார்கள். இது ஒருவகையில் ஜெராக்ஸிங் மாதிரியான நிகழ்வாக இருக்கும். இது முதல்வகை. மற்றொரு வகை ஆழ்மனதில் பதிந்து இருக்கும் பிடித்தவர்களின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் சில வழக்கங்கள் தானாக தன்னுடைய கற்பனையுடன் சேர்ந்து நிகழ்வாகவோ அல்லது வார்த்தைகளிலோ வெளிப்படும். இவ்வகையான கவர்தல் பொதுவாக எழுத்துத்துறையில் அதிகமாக காணப்படும். இது இரண்டாவது வகை.

அனைவரும் என்றாவது ஒருநாள் கவர்தலை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பது அனைவருக்கும் உண்டான பொதுவான தலைவிதி போலும். இத்தளத்தில் உள்ள சில கவிதைகளில் கவிஞர் கண்ணதாசன் கவிதை வரிகளின் தாக்கத்தையும், கவிஞர் வாலி அவர்களின் கவிநடையையும் காண முடியும். இரண்டாவது வகையாக இருக்கக்கூடும்.

திரு. சுகி. சிவம் அவர்கள், இதைப்பற்றி பொய் முகங்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அவர் கவர்தல் என்ற முறையில் அணுகாமல், ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் உண்டு, அது பல்முகமல்ல, பலரது முகங்கள் என்று தத்துவங்களின் வழியில் கவர்தலைப் பற்றி எழுதியிருக்கிறார். அனைவரும் சமூகத்தால் உருவான சமூக மனிதர்களே…என்ற கருத்தோடு கவர்தலுக்கான அடிப்படையை விளக்கியிருக்கிறார்.

உளவியலைப் பொறுத்தவரை இது மெமெடிக்ஸ் என்ற பிரிவில் விளக்கப்பட்டு இருக்கிறது. மெமெடிக்ஸின் அடிப்படைக்கூறு மீம் என்று அழைக்கப்படுகிறது. மீம் என்பதை மிஸ்டர். ரிச்சர்ட் ப்ராடி “ஒரு எண்ணம், நம்பிக்கை அல்லது மனப்போக்கு – ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவது” என்று கூறுகிறார். மீம் என்ற வார்த்தையை உருவாக்கிய மிஸ்டர். ரிச்சர்ட் டாக்கின்ஸ் அதை “பிறர் நடவடிக்கையை பிரதிபலித்தல்” என்று கூறுகிறார். தினந்தோறும் பலநூறு மீம்கள் நம்மிடம் பரவிக் கொண்டிருக்கிறது. மீம்களை கவரும் போது, நல்லவையா அல்லது கெட்டவையா என மனதால் பாகுபடுத்த முடியாது. என்னை ஆட்கொண்ட மீம் என்னவென்று யோசித்து பார்த்தேன். தும்மல் வந்நவுடன் என்னுடைய தாயார் “அம்மா” கூறுவார். அதனால் நானும் பதினைந்து வருடங்களுக்கு மேலாக அதை பிரதிபலித்திருந்தேன். ஆனால் அது,வேலைக்காக பெங்களூர் சென்றபின் சில வருடங்களில் “முருகா” என மாற்றம் அடைந்தது. உபயம் என்னுடைய சீனியர். நல்ல பக்திமான். என் மனைவியோ “பாபா” என்று பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை நாங்கள் இருவரும் மாற்றவில்லை. ஆக, விருப்பங்களே பிரதிபலித்தலை தேர்வு செய்வதாக நினைக்கிறேன்.

சிலர் தன்னுடைய நகல்களை அவ்வளவாக ரசிப்பதில்லை. சிலருக்கோ நகலாக ஏதேனும் வாராதா.. என்ற ஏக்கத்தில் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் கவர்தலை தவிர்க்க விரும்புவார்கள். பலரோ கவர்தலை தங்களின் மூலதனமாக வைத்திருப்பார்கள். இவ்வகையான முரண், இந்த சமூகத்தை கூர்ந்து நோக்கினால் புலப்படும்.

பற்றாமல் விளக்கு எரியாது என்பதைப் போல, கவராமல் மனிதனால் பிரகாசிக்க முடியாது என்பதை காலம் காட்டிக் கொண்டு கடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எவ்வகை என்பதை, அவரவர் விருப்பங்களே தேர்வு செய்கின்றன.

உதவிய புத்தகங்கள்:-
1. மனசே நீ ஒரு மந்திரச் சாவி – திரு. சுகி. சிவம்
2. மழுப்பல்களை நிறுத்துங்கள் (Stop the Excuses By – Dr. Wayene W. Dyer)

தொடர்பு

நிழல்களை ரசித்திருந்த நடையில்
தடையாய் வந்தது மேகக்கூட்டங்கள்
வண்ண மேகங்களை ரசித்திருந்த நடையில்
தடையாய் வந்தது மரங்களின் வரிசைகள்
சிதறும் ஒளிகளில் மயங்கிய மனதை
கலைத்தது வாகன-ஒலிப்பான்களின் கதறல்கள்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது போலிருந்தாலும்
சுழன்று கொண்டிருந்தது அவைகளுக்கான தொடர்பு.
தொடர்புகளின்றி எதுவும் இயங்காது!

முப்பரிமாண மாயை

அடர்நீலத்தின் முன் வரும் வெள்ளை மற்றும் சிகப்பின் பல்வேறு நிறபேதங்கள்(shade) முப்பரிமாண மாயைத் தருவதைத் தான் இப்படம் தருகிறது. dpi அதிகமாக இருக்கும் திரைகளில் இவ்வகைப் படங்கள் அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்து காத்திருந்து அடைத்(ந்)த படமில்லை. எதிர்பாராமல் தானாக வந்து மாட்டியது.

image

 

 

உட்பொருள்

கைகூப்பி நம்பிக்கை வேண்ட
வரிசையிடம் சேரும் கால்களை
வகையாய் பிரித்திடும் பொருள்
உலகில் உலவும் உட்பொருள்…!

நீயுறங்கும் பொழுதில்…

ஊஞ்சலாடிய தொட்டிலும் குதித்தாடிய கட்டிலும்
உன்தடம்பதிக்க வரிசையில் கைகட்டி நின்றன
ஊட்டிவிட்ட பொம்மையும் அவிழ்த்துவிட்ட ஆடையும்
உன்விரல்பற்றி வலம்வர தொட்டுப்பிடிக்க வந்தன
ஊதிவிட்ட பலூன்களும் கிழித்துப்போட்ட காகிதமும்
உன்கரம்பட்டு ஆடிட காற்றிலோடி பறந்தன
ஊற்றியெறிந்த புட்டிகள் வண்ணவண்ண டப்பிகள்
உன்கவனத்தை கவர்ந்திட உருண்டோசை எழுப்பின

நீயிருக்கும் வேளையிலே

நீயிருக்கும் தெருக்களில்
மலர்களுக்கு வருத்தம் வரும்
மலர்சரங்களோ ஏக்கத்தில்
கூடையில் சுருண்டு இருக்கும்…
நீநடக்கும் பாதையில்
பார்வைகள் பாய்ந்து வரும்
மணல்களும் கற்களும்
காலணியுடன் போர் தொடுக்கும்…
வுன் பேச்சைக் கேட்டால்
குயில்களுக்கு கோபம் வரும்
செல்ல சிணுங்களுக்கு
சிட்டுகளுடன் இடம் பெயரும்…
தென்னகத்து நிறத்தை கண்டு
மயில்களும் வம்பிழுக்கும்
சிரித்த முகத்தை காண்டால்
சிலைகளுடன் போட்டியிடும்….
போதும்…. பார்வை சரியில்லை
கற்பனைக்கு பா(ர்)வைகள் காரணமல்ல…..