மாயை

ஆசையை அறிந்து தொடுக்கப்படும் சரமது

ஆசையை அறிய கொடுக்கப்படும் மதுவது

ஆசையை அடக்கி மனதைத்திறந்து உழல்வதது

ஆசையை அரிந்து மனதைவிலங்கிட உடைபடுவதது

பி.கு. மாயை பிறரால் உருவாவதில்லை. தம்முடைய ஆசைகளைக் கொண்டு பிறராலும்/ தம்மாலும் உருவாக்கப் படுபவை. கற்பனைகள் தம்மனதில் தோன்றி மறைபவை. ஆனால் மாயை பலரால், அவரவர் கற்பனைகளால் வளர்ந்து உலவி பரவி ஒருவரை/கூட்டத்தை வளைக்கும் ஒருவகை வலைப்பின்னல். தெரிந்தும் தெரியாமலும் பின்னப்படுபவது. யாருக்கும் தெரியாமல் சூழ்நிலைகளைக் கொண்டு காலமும் மாயவலையைப் பின்னும்.

தெளிந்தால் தெரிவது, அவரவர் ஆசைகளே அவரவரின் மாயைகளை தேர்வு செய்கின்றன. மாயையில் சிக்காத துறவிகளைக் கண்டால் சொல்லுங்கள். மாயை என்றால் என்ன? எனக் கேட்டு அறிந்து தெளிந்து அதனை உடைக்க வேண்டும்.

இயலாமையும் அறியாமையும் ஆசையுடன் கலந்து தொடுக்கும் சரமென்று அவர் கூறினால் முதலில் எதைத் தேடுவது?

எம்முடைய இயலாமையையா… அதை அறிய எம் அறியாமை தடையாக இருக்குமா…. அல்லது முதலில் அறியாமைத் தேட இயலாமை தடையாக வருமா… அல்லது ஆசையைத் தேடி அகற்றினால், அதனுடன் தொடர்புடைய இயலாமையையும் அறியாமையும் அகற்றி விட முடியுமா…. என்று எண்ணங்கள் பல்கி பெருகினால் மாயையின் ஆனிவேர் தெரிய வாய்ப்புண்டா….

ஆசைகளை அடக்காமல் வெளிப்படையாகப் பேசி பலவகையான மக்களுடன் பழகும் மனிதர்களை மாயை ஏன் அண்ட மறுக்கிறது என்பதை அறிய முடியுமா?

தெரியவில்லை, தெரிந்தவர்கள் மேலும் சிந்தியுங்கள்….. தெளியலாம்.

இனிதாய் அருள்வாய்….

போல…

கேள்விகளற்ற அமைதியான சூழலில் எந்த இயலும் வளராதது போல….
தர்க்கம் அடிப்படை என்பது எழுதும் அளவில் உள்ளது போல….
தன்குடத்து நீர்தான் அறிவு என்பதை ஏற்றுக் கொண்டதைப் போல…
இதுஏதும் அற்ற புன்செய் நிலமென்றும் வானைப் பார்க்கும் போல.

கண்களும் அலையும்…

கண்களும் கல்லாகி வருத்திய நிலையில்

கண்டது கல்லால் வடித்த சிலையா

உணர்ந்தது கல்லில் வரும் அலையா

உண்டாவது கல்லாமல் வந்த கலையா?

ஒன்றினால்….

தாளீர்ப்பைக் கண்டு தரையில் கிடக்கும்

தாளினிருப்பும் காற்றால் தரையிலிருந்து கிளம்பும்

தாளிலிருக்கும் வரிகள் தரையைப் பார்க்கும்

தாள்களிணைந்து பாரமாகா வரையில் பறக்கும்

( தாள் – காகிதத்தாள், ….)

எதைப் பார்க்க?

கண்டதும் கற்றதுமாய் விரியுமென் உலகில்
கேட்டதும் சுற்றமுமாய் அதிருமென் மனதில்
உணர்ந்ததும் உண்மையும் சுற்றிடுமென் நினைவில்
உறைபவை நன்மையும் தீமையுமான நாணயமா?

எதுவும் நமதன்று….

எண்ணங்களின் மூலம்காண நதியிலெ திர்நீச்சல்
எண்ணங்களின் முகிலினை மலைமேலே காண
எண்ணங்களின் சுழற்சி மழையைப் போன்றதா!
எண்ணங்கள் சூழுலகில் சிறுதுளியும் நமதன்று

அலைகள்

படிப்பது உணர்ந்திட வாய்ப்பில்லை என்பது போல
எழுதவில்லை என்றால் வாழ்ந்திடும் ரகசியம் போல
எழுந்துவரும் பூதங்களை அடக்க முடியாதது போல
எழுந்துவரும் புலனினை அடக்க முடியாது போல!.

தொடர்பு

நிழல்களை ரசித்திருந்த நடையில்
தடையாய் வந்தது மேகக்கூட்டங்கள்
வண்ண மேகங்களை ரசித்திருந்த நடையில்
தடையாய் வந்தது மரங்களின் வரிசைகள்
சிதறும் ஒளிகளில் மயங்கிய மனதை
கலைத்தது வாகன-ஒலிப்பான்களின் கதறல்கள்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது போலிருந்தாலும்
சுழன்று கொண்டிருந்தது அவைகளுக்கான தொடர்பு.
தொடர்புகளின்றி எதுவும் இயங்காது!

உட்பொருள்

கைகூப்பி நம்பிக்கையை வேண்ட
வரிசையிடம் சேரும் கால்களை
வகையாய் பிரித்திடும் பொருள்
உலகில் உலவும் உட்பொருள்…!

பொருள் இல்லாத இடத்தில் கோவில்கள் இருப்பதில்லை. இருந்தாலும் இருள் சூழ்ந்து இருக்கும். ஏன் என்று சிந்தித்தால் உணர்வது இன்றைய உலகில் கடவுள் பொருள் அவதாரம் எடுத்திருப்பதாக தோன்றும். ஒரு விதமான மாயை…

ஆனால் உண்மை என்னவென்றால், அனைத்தும் அலையென்று அறிந்த பிறகும் மனம் கோவில்களைத் தேடி அலையும். இருள் இருந்தால் அருள் இருக்காது, பொருளுடன் மக்கள் கூட்டம் இருந்தால் அருள் மழை பெய்யும் என்ற எண்ணங்கள் அனைவரது மனதிலும் அடித்து தொங்கவிடப் பட்டிருக்கிறது.

பின் எதற்கு கோவில்கள் ?
இக்காலத்தில் அறிவை வளர்க்க பல உபயங்கள் வந்து நிலைத்ததனால், அறிவை ஒருங்கிணைத்து வளர்க்கும் நிலையை கோவில்கள் இழந்து வருகின்றன.

மனம் தூய்மை அடைந்தால், “இருள் அகலும் அருள் அடையும்” என்ற எண்ணங்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு அடிப்படை கல்வியறிவு அனைவருக்கும் வாய்த்ததனால், அடிப்படை அறிவை வழங்கும் நிலையை கோவில்கள் இழந்து வருகின்றன.

எஞ்சியிருப்பது மனத்தூய்மையும், பொழுதுபோக்கும் மற்றும் தானமும் தான்.
இக்காலத்தில், வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் தானம் அளிக்க மட்டுமே கோவில்களுக்கு செல்ல முடியும். அப்படியென்றால் எதற்கு அக்கால உண்டியல் நடைமுறை இன்றும் அறநிலையத்துறை பின்பற்றுகிறது ? புரியவில்லை. ஒரு வங்கி கணக்கு எண் போதுமே.
மீதம் இருப்பது பொழுது போக்கும், மனத்தூய்மையும் தான்.

இக்காலத்தில், அவரவர் மனையிலே பொழுதை பயனுள்ளதாக போக்கிக் கொள்ளலாம். அவரவர் மனையில் மனதை தூய்மைப் படுத்தலாம்.

எதற்கு சுற்றி வர வேண்டும், உண்மையை நேராக உரைக்க விரும்புவது தானமும் தர்மமும் பொருள் நிறைந்தவர்களுக்குத் தான். ஏழைகள் என்று உங்கள் மனது உணர்ந்தால் எஞ்சிய பொருளை வருங்காலத்திற்காக சேமியுங்கள்.
ஏழைகள் கோவில்களுக்கு தானம் தருவதை தவிருங்கள். பொருளையும் அருளையும் கோவிலுக்குச் சென்று பெற்றுச் செல்லுங்கள்.
கோவில்கள் என்றென்றும் ஏழைச் செல்வங்களுக்குத் தான்.

எழுத்துப்பிழைகளை மறந்து, கருத்துப்பிழைகளை உணர்த்துவாய்……

இனிதாய் அருள்வாய்………..