முக்கனிச் சாலை

அன்றாடம் அதிகாலையில் மெதுவாக நடக்கும் மனிதர்களுக்காக இரு குறும்பாலங்கள் அந்நகரத்தில் இருந்தன. பலவண்ண நடைகளை குறும்பாலங்களும் தினமும் பார்த்துக் கொண்டிருந்தன. வயோதிகர்களும் வியாதிகளுக்காக நடப்பவர்களும் குறும்பாலத்தையும் அதன் கீழ் தெரியும் மணற்பரப்பையும் பார்த்த படி நடந்து கொண்டிருப்பார்கள். உடலைப் பேண வேண்டும் என்ற எண்ணத்தோடு நடப்பவர்களின் எண்ணிக்கை அச்சமயம் பாலத்தில் கடக்கும் பேருந்துகளை விட குறைவாகத்தான் இருக்கும். தென்னகத்து தலைவிதி என்று தோன்ற வைக்கும் கருமையில் அச்சிடப்பட்ட மஞ்சள் நிற சுவரொட்டிகள் அங்கிருக்கும் விளக்கு கம்பங்களை அலங்கரித்துக் கொண்டு அதில் இருக்கும் வாசகத்தைப் படிப்பவர்களை வா அருகில் வா யென்று அழைக்கும். அவற்றை சுவர்களில் ஒட்டியிருந்த திரைப்படச் சுவரொட்டிகள் ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தன. சுவர்களின் சொந்தக்காரர்களுக்கு ஏன் வாடகை எதுவும் தருவதில்லை என்று பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகை கேட்டது. என்னை ஒட்டியவர்கள் எவ்வளவு தந்தார்கள் தெரியுமா? என்று ஆச்சரியத்தையும் சேர்த்து அவிழ்த்து விட்டது. அவிங்களே கேக்கல உனக்கென்னப்பு…. ஒட்டுனத மட்டும் காட்டு… என்றது ஒரு படத்தின் சுவரொட்டி. தொலைக்காட்சியின் நிகழ்ச்சியைப் பற்றிய திரைகள் உங்களுக்கு அப்புறம் வந்தேன் இப்ப எப்படி நிக்கிறேன் பார் என்று அலட்சியமாக சொல்லிக் கொண்டு நின்று கொண்டிருந்தது வண்ணமயமாக. சுவரொட்டிக்கு கொஞ்சம் ஆத்திரம் வந்திருக்க கூடும். கதாநாயகனின் முகம் சிவந்து கிடந்தது. இவையனைத்தையும் சட்டையேதும் செய்யாமல் வரிசையாக மரக்கட்டைகளால் கட்டப்பட்டு வாழ்த்துகளை தமிழில் டிசைன் டிசைனாகக் கூறும் வாழ்த்துக்கட்டைகள் நின்று கொண்டிருந்தன. இதற்கு ஏன் பிளாஸ்டிக்கோ பரிசோதனைக்கூடத்தில் விளையும் மக்காத விளைபொருட்களோ உபயோகிப்பதில்லை என்று தாங்கிக் கொண்டிருக்கும் தரையும் பக்குவமாக சிந்தித்து தனக்குத்தானே கேள்விகளை கேட்கத் தொடங்கியது. ஒரு தடவை குழி தோண்டி வாழ்த்துகள் சொல்லி விட்டால் உயிர் இருக்கறவரைக்கும் உயிரோடு இருக்கும்.. என்று மெல்லக் கேட்டது. மெதுவாக நடந்து வந்த பசுவிற்கு கேட்டு விட்டது. நாங்க திங்கிறது பிடிக்கலையா?…. இதக்கேட்டு அவிய்ங மக்காத போஸ்டர அடிச்சா அப்புறம் வைக்கோலையும் இறக்குமதி பண்ண வேண்டியுருக்கும் பாத்துக்கோ… அப்புறம் உங்க ஆத்தா இந்தியத்தாயிக்கு வந்த சோதனையைப் பாரீர்ன்னு ஒரு குழிய தோண்டி போஸ்டர நடுவாய்ங்க பரவாயில்லயா….இப்படி போஸ்டருக்கு போஸ்டருன்னு துளைச்சும் அவிங்களுக்கு எடுத்து கொடுக்குற….துப்புன எச்சிய வைச்சு முகத்த துடைச்சோமா…. பெய்ஞ்ச மலயில நனஞ்சு குளிச்சோமான்னு இருக்கனும்… இந்தா மூஞ்சிய கழுவிக்கோ என்று கோமியத்தை சிந்திக் கொண்டே சென்றது. இவைகளின் கவனத்தை கலைத்தபடி வேகமாக ஒரு கார் சாலையில் திரும்பியது. ராஜனின் கார் தான் என்று பார்த்தவர்கள் சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் காரின் கண்ணாடிகளில் மெல்லிய கோடுகளால் கோலம் போட்ட மாதிரி எழுதியிருப்பார். அந்நகரத்தின் கொடையாளர்களில் ஒருவர். அவரிடம் சிலசமயங்களில் கதைவிட்டு கறப்பவர்களும் இருக்கிறார்கள். அதுவும் துதியில் தொடங்கி சுயபுராணத்தில் முடிக்கும் தருமிகளுக்கு சன்மானம் வழங்கி கௌரவிப்பார். பாராட்டை வேண்டி வந்தவர்கள் சன்மானத்தைக் கண்டு திளைத்துபோவதுண்டு. எதுஎப்படியோ பெயருக்கேற்றார் போல் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ராஜனின் கார் வேகமாக குறும்பாலத்தைக் கடந்து மாபலாவாழை சாலையில் திரும்பியது. அந்நகரத்திற்கு அழகாக ஒரு துணைநகரம் இருந்தது. நகரத்தின் கலையரங்கம் போல் எப்பொழுதும் களைகட்டியிருக்கும். முக்கனிச் சாலை துணைநகரத்தின் நுழைவாயில். பெயருக்கேற்றார் போல் மரங்கள் சூழ்ந்து குளுமையாக இருக்கும். மனது சரியில்லையென்றால் ராஜன் காரில் வேகமாக வந்து நிறுத்திவிட்டு இச்சாலையில் மெதுவாக நடக்க ஆரம்பித்துவிடுவார். காலையில் மரங்களின் துளைத்து வரும் கதிர்கள் அவரின் கவலைகள் துளைத்துக் கொண்டு போய்விடும். இன்றும் அப்படிதான். பாரத்தை இறக்கிவிட்டு பாட்டு ஒன்று பாடிக்கொண்டே வீட்டிற்கு திரும்ப ஆரம்பித்தார். முக்கனி சாலையின் சிக்னலுக்கருகே ஒரு பேருந்து நிறுத்தம். சிக்னல் விழுந்தும் பேருந்தின் அணிவகுப்பால் அவரின் கார் செல்ல முடியவில்லை. மொதல்ல இந்த பேருந்து நிறுத்தத்த மாத்தனும் என்று மனதினில் சொல்லிக்கொண்டார். அப்புறம் அதை அடியோடு மறந்துவிட்டார். வேலைப்பளுவும் அவரை ஒரு வாரம் போட்டு ஆட்டியது. துணைநகரத்தில் இருக்கும் கோவிலுக்கு போகலாம் என்று முக்கனி சாலையில் திரும்பும் போது தான் கவனித்தார். பேருந்து நிறுத்தம் இடம் மாறியிருந்தது. கோவிலுக்கு போய்விட்டு வந்து விசாரிக்க ஆரம்பித்தார். நிறைய பேர் இதப்பத்தி புகார் தெரிவிச்சு இருந்தாங்க ராஜன்…. என்னாச்சுன்னு தெரியல உடனே மாத்தனும்னு ஆர்டர் வந்துருச்சு… அதான் மாத்திட்டோம்… என்றார் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஒர் அதிகாரி. மனதும் அதற்குமேல் குழம்புவதற்கு வழியில்லையென்று வேறுவிசயங்களை அசை போட ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்தும் இதைப்பற்றி மூச்சுவிடவில்லை. ஆனாலும் மனதின் மூலையில் உட்கார்ந்து கொண்டு சிலசமயம் எட்டிப் பார்ப்பதுண்டு. மீண்டும் ஒரு சிறுபிரச்சனை அழகுராசாவால் வந்தது. எப்பொழுதும் அழகு அச்சமயம் யார் வலியவர்களோ அவர்களுக்கு துணைபோவான். எப்படி வந்து ஒட்டுவான்… ஓட்டுவான்… ஓடுவான்… என்று யாருக்கும் தெரியாது. கொஞ்சும் தமிழில் விளையாடுவான். யார் சொன்னது நிலவின் முதுகு ரகசியம் என்று ஆச்சரியகுறிய போட்டுக்கோ இதோ கைவைத்து விட்டு வந்திருக்கிறேன் இன்று அதே ஆச்சரியகுறிய இன்னோருதபா போட்டுக்கோ என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பான். யாருப்பா அது என்று அப்பாவிகள் யாரும் கேட்டுவிட்டால், புத்தகத்தில வாசிச்சேன் பிடிக்கலையா? புரியலையா?… பிடிக்கலைனா இன்னோரு கவிதையிருக்கு வடமொழியில சொல்லவா….என்பான். இப்படி பேசியே சாட்டையாய் மாறி கேட்பவர்களை பம்பரமாக்கி விடுவான். கிசுகிசுகளை வைத்து கிச்சு கிச்சு மூட்டுவதில் தன்னிகரற்றவன். வழக்கம் போல ராஜனின் கடைக்கு வந்து கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தான். ஒரு கிசுகிசுவிற்கு ராஜன் கொஞ்சம் பலமாக சிரித்துவிட்டார். கிசுவின் நாயகன் உள்ளூர் அரசியல் புள்ளி. கிசுவின் நாயகி பக்கத்தூர் புள்ளிமான். உலகனாதனும் சிரிக்கும் போது சங்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சங்கம் கலைந்தது. விசயம் வீண் புரளியானது. அன்று கடைக்கு வாங்க வருபவர்களை விட, சொறிந்து சிரங்காக்க வந்தவர்கள் ஏராளம். கக்ககக்கன்னு சிரிச்சீங்களாம்….. ஏதோ அந்த அ.பு. மேல காட்டுகடுப்புல இருக்கீங்களாம்……என்று எக்கச்சக்க விசாரிப்புகள். தர்மசங்கடமாய் போய்விட்டது ராஜனுக்கு. சொன்னவனைக் காணவில்லை. கேட்டு சிரித்தவனை துவம்சம் செய்தது உலகம். ராஜனும் அவன் வாய் கிழிஞ்சா தான் திருந்துவான்… என்று சொல்லி விட்டு வழக்கம் போல முக்கனி சாலைக்கு சென்றுவிட்டார். அதைச் சொல்லும் போது உலகனாதன் பின்னால் தெருவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான். அழகுவின் வீட்டில் ஒரே ரணகளம் தான். ராஜன் அழகின் பல்லைப் உடைக்க போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பல்லு மட்டும் பேந்ததுன்னு வையி… அப்புறம் பாரு… என்றான் அழகு. அடிபொடிகளிடம் இருந்து, ராஜன் முக்கனி சாலைக்கு வந்து சோகமாக நடந்துபோய் விட்டு கொஞ்சம் நேரம் கழித்து திரும்பும் போது சந்தோசமாக பாட்டு பாடிக்கொண்டே சென்றார் என்ற தகவல் வந்தது. அழகின் மனம் சந்தோசத்தில் திளைத்தது. ஒரு கிசு சிக்கிவிட்டது. யார் அந்த தொடரும் கிசு…. அவனின் மண்டையை அரித்தது. சொறிந்ததில் விடிய ஆரம்பித்தது. முதல் வேலையாக முக்கனிச் சாலைக்கு சென்றான். கொஞ்ச தூரம் நடந்திருப்பான். யார்கிட்ட விசாரிக்கலாம் என்று ஒரு தென்னைமரத்தின் கீழ் நின்று கொண்டு  சாலையின் இருபுறமும் பார்த்துக் கொண்டிருந்தான். பறவையின் எச்சம் சட்டையில் விழுந்தது. இவன்மேலே பார்க்க, இவன் முகத்தைப் பார்த்த பறவை பயந்து பறக்க, அதிர்வில் காய்ந்து கருகிக் கொண்டிருந்த வயதான இளநீர் விழ கச்சிதமாக நடந்தேறியது பல் உதிரும் படலம். வீட்டிற்கு வந்தவுடன், நாலு பல்லு போச்சு… என்றான். ஆஹா கொஞ்சம் பெரிய கையா?… பேத்துட்டாய்ங்களா… ஆளு எப்படியிருந்தா…. அம்சமா இல்லை குரங்கா…..என்று கேட்டது அடுப்படியில் இருந்து ஒரு குரல். என்னாச்சு என்று கேட்பவர்களிடம் அழகும் கதை விட ஆரம்பித்தான். விசயம் உள்ளூர் சாமியாடி காதுக்கும் போனது. ஆடி போய்விட்டாள். ஆத்தாவுக்கு ஏதும் குறை வைச்சேனா?… போட்டிக்கு ஆள் வருது… என்று ஆத்தா படத்தின்முன் பதற ஆரம்பித்தாள். பக்கத்தூர் அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை வேறு சென்று வந்தாள். அதற்கப்புறம் அழகு, ராஜனைப் பார்க்கும் போதெல்லாம் கையை வைத்து வாயை மூடிக் கொள்வான். விசயம் அரைகுறை அடிபொடிகளால் காட்டுத்தீ போல் பரவியது. முக்கனி சாலையில் திடீர் மரத்தடி கோவில்கள் முளைக்க ஆரம்பித்தன. மக்கள் வந்து கண்மூடித்தனமாக பிராத்தனைகளை அடிக்கிக் கொண்டிருந்தனர். ராஜன் கோவிலுக்கு போவதென்றால் கூட முக்கனிச் சாலையை தவிர்த்து விட்டு வேறு சாலையை உபயோகிக்க ஆரம்பித்தார். பிராத்தனை கூட்டங்களும் வழிபாடுகளும் கதைகட்டத் தொடங்கின. அழகுவின் அடிபொடிகள் ராஜனைப் பார்க்கும் போதெல்லாம், பச்சமண்ணு அவன்…. எப்படி சிரிச்சுக்கிட்டே பாடுவான்ன் தெரியுமா… சிரிச்சுக்கிட்டே பாடுவான்னா?…. ஆமா…. கெட்டபுத்தி போகுதான்னு பாரு…. ஆமா போகுது…. என்று ஜாடையில் வசை பாட ஆரம்பித்தனர். இப்போதெல்லாம் அழகு சிரிக்கும் போது அழகாக தங்கப்பற்களும் கூடச் சேர்ந்து சிரிக்கும். பழைய பற்களை விட இது அம்சமாகத்தான் இருந்தது. ஒருவழியாக முக்கனிச்சாலை அமைதியையும் குளுமையையும் இழந்து கற்பூர வாடையிலும் கடைகளின் இரைச்சலிலும் மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்க்கும் போதெல்லாம் ராஜனின் மனதும் கலங்கி கண்களும் கண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடும். பறவைகள் பறந்து கொண்டும் மந்திகள் தாவிக் கொண்டும் பழங்கள் உதிர்ந்து கொண்டும் இருந்து கொண்டிருக்கிறது முக்கனிச் சாலையில் இன்றுவரை. சாமியாடியும் வெள்ளிக்கிழமை தவறாது முக்கனி சாலையில் வந்தமர்ந்து குறைகளை கேட்க ஆரம்பித்தாள். இப்போதெல்லாம் தருமிகளும் விஷமிகளும் ராஜனைப் பார்க்க வருவதில்லை. குடும்பத்திற்கு ஒரு விதத்தில் அது நிம்மதியை அளித்தது. மழைக்காலமும் வந்தது. தரையும் குளிக்க ஆரம்பித்தது. முக்கனி சாலையும் அமைதியாக நனைத்து கொண்டிருந்தது. ராஜனும் முக்கனிசாலைக்கு வந்து காரை விட்டு இறங்காமல் சாலை அமைதியாக நனைவதை ரசிக்க ஆரம்பித்திருந்தார்.

ஆயிரமாயிரம்

மஞ்சள் வெயில் காற்றுடன் சேர்ந்து ஆத்தங்கரையை தன்வசம் ஆட்டிக் கொண்டிருந்தது. இது போதாதென்று நாணல்களும் பலவண்ண மலர்களும் உடைகளாக உருமாறியிருந்து மயக்கிக் கொண்டிருந்தது . இவற்றின் நடுவில் ஒரு அரசமரம் தனியாக நின்று கொண்டிருந்தது. அதன் கீழ் சதுரமாக மூன்று அடிக்கு கற்களால் மேடையெழுப்பிருந்து. நம்பிக்கை ஒன்று கையை அருளும் வாக்கில் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தது. அந்தக் காலம் போல் இல்லை. இக்காலத்தில் அனைவரும் வேலை வேலையென்று அலைந்து கொண்டிருக்கின்றனர். அவசர உலகில் அடிபட்டவர்களுக்கும் அடிபணிந்தவர்களுக்கு மட்டும் தான் ஓய்வும் பக்தியும் ஓரளவு கிடைத்தது. நம்பிக்கையும் இவ்வகை இருவகை அடியார்கள் யாரும் வருகிறார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நம்பிக்கையைச் சுற்றி நாகரிகம் ஏதும் வளராத காரணத்தினாலும், இதுவரை யாரும் வந்து பாமாலை சூட்டாததாலும் நம்பிக்கையை பொருத்தமட்டும் எல்லாமே செல்ப்சர்வீஸ் தான். சுத்தமாக இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அருகில் சென்று அவரவர் விருப்பம் போல் வழிபாட்டைச் செய்யலாம். சுத்தமாக வரவேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையை ஆத்தங்கரையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அக்காலத்தில் நம்பிக்கையை நிறுத்தி வைத்தவர்களுக்கு, பயிருக்கும் வயிருக்கும் சிலவாரங்கள் மட்டுமே ஆதாரத்தை அளந்து விடப்போகிறார்கள் வருங்கால சந்ததிகள் தெரியாமலே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். சுத்தம் என்பது இக்காலத்தில் வீடும் வீடு சார்ந்த விசயமாகிவிட்டது. அதனால் நம்பிக்கையும் காலத்திற்கு ஏற்ப தனது கொள்கையும் சுத்தமான மனதுடன் யார் வந்தாலும் அருளுவது என மாற்றிக் கொண்டது.  நேரம் ஆறுடன் சேர்ந்து கடந்து கொண்டிருந்த வேளையில், வாடிய குடும்பம் ஒன்று கரையில் நடந்து கொண்டிருந்தது. அரசமரத்தடியில் இளைப்பாற தொடங்கியது. வேலை செய்யாமல் பொருள் கிடைக்க வேண்டுமானால் அது கூரையை பிய்த்துக் கொண்டுதான் விழவேண்டும். குடும்பத்தலைவன் நம்பிக்கையை பார்த்தான். கூரையேதும் இல்லாமல் கவலையின்றி இயற்கையோடு இயற்கையாய் ஒன்றியிருந்தது. நீயும் நம்ம இனம் தான…. யாரும் இல்லையா…. என்றான் மனதினுள். ஆமோதிக்கும் விதமாக இதமான காற்று அவனை வருடிச் சென்றது. தொலைவில் பாடிக்கொண்டிருந்த வரிகளும் காற்றுடன் வந்து அவன் காதையடைந்தது, உள்ளத்தில் வைத்ததை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்… அவனும் பாட்டுக்கு தாளம் போட ஆரம்பித்தான். அக்கணம் மட்டும் கவலை போனயிடம் தெரியவில்லை. அப்பொழுது கார் ஒன்று கரையை கடந்து கொண்டிருந்தது. காரில் இருந்தவன் அரசமரத்தின் கீழ் நம்பிக்கையை பார்த்தான். பார்த்தவுடன் வேகத்தை குறைக்க கால்களும் தெளிவாக பார்க்க கண்ணாடியை இறக்கும் கைகளும் செயலில் ஒன்று சேர்ந்தன. பழக்கதோசம் அவன் இடப்பக்க கண்ணாடிக்கு பதில் வலப்பக்க கண்ணாடியை இறக்கினான் சட்டென்று இடப்பக்க கண்ணாடியை இறக்க ஆரம்பித்தான். வேகமும் காற்றும் உடலினில் இணைந்து கண்களில் நீராக வடிந்தது. விழிகளில் கண்டு பின் மனதினில் காண விழிகளை மூடித் திறந்தான். கைகள் தானாக கண்ணாடியை மூடியது. மனதுடன் சேர்ந்து உடலும் உடுத்தியிருந்த ஆடைகளும் பாரத்தை கழட்டி வைத்தது போல ஒரு உணர்வை உணர்ந்தான். கண்டதை கண்டவரிடம் பேசுவது தகும், கண்டவரிடம் பேசுவது தகுமா?…. நம்பிக்கையும் நகைத்துக் கொண்டே கார் செல்லும் வழியை பார்த்துக் கொண்டிருந்தது.

நம்பிக்கையின் காலடியில் ஒரு காகிதம் பறந்து வந்து விழுந்தது. காற்றுடன் வரவிரும்பாத கனமான காகிதமில்லை. யாருடனும் இருக்க விரும்பாத மதிப்புள்ள காகிதம் போல, அதனால் நம்பிக்கையின் காலடியை அடைந்தது. நம்பிக்கையுடன் சுற்றும் மனிதர்களுக்கு தேவைப்படும் விசயம் என்று நம்பிக்கையும் கவனிக்காமல் இருந்தது. குடும்பத்தையும் அவர்களின் முகவாட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்த்த அவன் முகம் நம்பிக்கையை நோக்கித் திரும்ப காலடியில் அந்த காகித்தைப் பார்த்தான். எடுத்து விசயத்தை வீட்டுக்காரியிடம் சொன்னான்.

வேண்டாங்க…. யார் எதுக்காக வைச்சுட்டு போனாங்கன்னு தெரியல….

இல்லைம்மா… நா அங்க தான இருந்தேன்… வரும் போது இல்ல… திடீருனு இருக்கு… இரு நா போயி இத மாத்திட்டு விளக்குக்கு எண்ணெயும் சாப்பிடுறதுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வாரேன்… என்றபடி கிளம்பினான்.

வரும்போது அவனுடன் இருந்த பொருள் இல்லையென்ற கவலை காற்றில் கலந்து ஒரு வித ஆய்வுக்காக புகையின் பின்னால் சென்று கொண்டிருந்தது. அவன் கரையில் நடந்து கொண்டிருந்தான். கொஞ்சம் தொலைவில் ஒரு கோவிலும் அதைச் சுற்றி வீடுகளும் தெரிந்தது. ஆயிரமாயிரம்….. என்ற பாடல் காற்றில் தவழ்ந்து கொண்டிருந்தது. பாட்டைக் கவனிப்பதற்காக வரும் திசையை பார்த்தான். சூழ்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களுடன் கோபுரகலசம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. பணத்தை மாற்றி பொருள்களுடன் வந்து கொண்டிருந்த அவனை குடும்பமே முகமலர்ச்சியுடன் பார்த்தது. நிலத்தின் மேல் விளக்கு எண்ணெயைச் சுமந்தபடி நின்றது. எண்ணெய் சில நிமிடங்களில் நூல்களைப் பற்றியது. நூல்கள் ஒன்றிணைந்து தீயைப் பற்றியது. தீவினை புரிந்தால் தான் தீபமாக முடியும் என்று நம்பிக்கையும் வந்த வெளிச்சத்தில் அருளியது. யாருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. காற்றும் மிதமாக கடந்து கொண்டிருந்தது. வீட்டையடைந்து காரை விட்டு இறங்கும் போது தான் அவனுக்குத் தெரிந்தது மனதைப் போல் தன்னுடைய சட்டையும் கனமில்லாமல் இருக்கிறது என்று. பசியாறிய வயிற்றுடன் அக்குடும்பம் கரையில் நடக்கத் தொடங்கியது. இவையனைத்தையும் பார்த்தபடி வானத்தில் அஷ்டமியும் கடந்து கொண்டிருந்தது.

ஆயிரத்தில் ஒருவன்

காற்று பலமாக வீசிக்கொண்டிருந்த காலைப் பொழுதில் ராஜா வேகமாக நடந்துக் கொண்டிருந்தான். முழு நிலவு போல் இருக்கும் முகம் இன்று இருண்டு கிடந்தது. எதையும் கவனிக்காமல் போய்க் கொண்டிருந்தான். வழக்கமாக அவன் பார்க்கும் மொட்டை மாடியும் குட்டை குதிரைவாலும் அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தன. என்றும் போல் ஒரு குக்குறுவான் கத்திக் கொண்டிருந்தது. அவன் அதைக் கடந்து கொண்டிருந்தான். அவன் கவனமெல்லாம் இது எப்படி நடந்தது? என்ற கேள்வியைச் சுற்றிக் கொண்டிருந்தது. சட்டைப்பையில் வைத்திருந்த ஒரு ஆயிரம் ரூபாயைக் காணவில்லை. எப்பொழுதும் நிதானமாக பணத்தை பர்ஸில் வைக்கும் அவன் எப்படி சட்டைப்பையில் வைத்தான் என்று நினைவிருக்கிறது ஆனால் எப்படி மறைந்தது என்று அவனைப் போல் பொறுமையாகக் கடந்து ஞாபகத்தில் அடைந்த காலத்திற்கு தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரையில் பணம் ஒரு பெரிய விசயமில்லை. செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் ஏதாவது ஒரு வகையில் பயனைத் தர வேண்டும் என்ற கொள்கையில் வாழ்பவன். எப்படி கசக்கி பிழிந்தாலும் நிகழ்கால எண்ணங்களுக்குள் அவனின் அந்த ஒரு கடந்தகால நிகழ்வு மட்டும் வர மறுத்தது. அவனுடைய கால்கள் குடும்ப மருத்துவர் ராஜராஜனின் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
என்ன ராஜா…. இதுக்குப்போயி கவலைப் படுறீங்க….போய் உங்க வேலைல கவனத்த செலுத்துங்க…
இல்ல சார்… எப்பவுமே இப்படி ஆனதில்ல… என்னால எப்பவும் ரெண்டு மூனு வார நிகழ்வுகள திரும்பி பார்க்க முடியும்…..
அதுக்கு என்ன ராஜா….. வேணா ஒரு ஸ்கேன் பண்ணி பாக்கலாமா… நாளைக்கு காலைல வாரீங்களா?..
நான் அதுக்கு வரல சார்…
பின்ன என்ன வேணும்…. சொல்லுங்க….
இப்ப என்னால கடந்த நாலு வார நிகழ்வுகள திரும்பி பார்க்க முடியுது….
ரியலி… தென் யு ஆர் பிளஸ்டு ராஜா…. எல்லாராலயும் இந்த மாதிரி திரும்பி பாக்க முடியாது….
ஆனா.. அந்த ஒரு நிகழ்வு மட்டும் திரும்ப வரல சார்…. எங்க எப்படி என்னோட சட்டையில இருந்த பணம் மறைஞ்சது…
யாராவது உங்களுக்கு தெரியாம எடுத்து இருக்கலாமில்ல…
இல்ல சார்… என்னப் பத்தியும் குடும்பத்த பத்தியும் தெரிஞ்சிட்டு இப்படி கேக்கலாமா?… கன்பார்ம் பண்ணுறதுக்கு நல்லா விசாரிச்சுட்டேன்… எல்லா இடத்தையும் ரெண்டு மூனு தடவ அலசிட்டேன்…
அப்படி சொல்லல…. வழியில வேற யாராவது….
இல்ல சார்… பணத்தை வைச்சதுக்கும் காணாம போனத உணர்ந்ததுக்கும் இடையில ஒன்னரை மணி நேரம் தான் இடைவெளி… நான் மட்டும் தனியாத்தான் வண்டிய ஓட்டிக்கிட்டு வந்தேன். கண்ணாடிய கூட இறக்கிவிடல… ஒரே ஒரு தடவதான் இறக்கினேன். உடனே மூடிட்டேன். கண்ண வேணா மூடித் திறந்திருப்பேன். கேப் பத்து செகண்ட் கூட இருக்காது….
நான் என்ன பண்ணனும் ராஜா…
உங்க அனுபவத்துல இந்த மாதிரி ஏதாவது கேச பாத்து இருக்கீங்களா?…
இல்ல ராஜா… நான் வேணா நியூராலஜிஸ்ட் ரகுராம் ராஜனைக் கேட்டு சொல்லுறேன்…
ப்ளீஸ் சார்….காலங்காத்தால வீட்டுக்கே வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?…
அப்படியெல்லாம் இல்லை… பாக்கலாம்…
பாக்கலாம் சார்…
வீட்டை விட்டு வெளியேறும் போது வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவர் அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தவர் ராஜனைப் பார்த்துக் கேட்டார்.
டாக்டர் ராஜராஜன் இருக்காரா?…
காலிங் பெல் அங்க இருக்கு… என்று அழைப்புமணி இருந்த திசையைக் கை காட்டியது. கண்கள் அவனை அறியாமல் வந்தவரின் சட்டைப்பையைப் பார்த்தது. அதில் ஆயிரம் ரூபாய் தாள் ஒன்று இருந்தது. அதைத்தவிர வேறு எதுவுமில்லை. என்னுடையதாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்து மறைந்தது. அழைப்புமணியும் ஒலித்தது. ராஜா சற்று நிதானமாகவே செருப்பை மாட்டிக் கொண்டிருந்தான். மனமெல்லாம் ந்யூராலஜிஸ்ட் ரகுராம் ராஜன் நிறைந்திருந்தார். மெதுவாக மொபலை எடுத்து தன்னுடைய ஒன்று விட்ட அண்ணனிடம் பேசினான். அவனும் ந்யூராலஜிஸ்டை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினான். சந்திக்கும் நேரமும் முடிவு செய்யப் பட்டது.
ந்யூராலஜிஸ்ட்டும் ராஜாவின் கதையை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். சில கேள்விகளை இடையில் கேட்டு பதிலை பத்திரமாக வாங்கிக் கொண்டார். ராஜா ஒரு வழியாக அனைத்தையும் சொல்லி முடித்து டாக்டரின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். குழப்பம் இல்லாமல் தெளிவாக பேசியிருந்தான். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாகவும் இருந்தான்.
மெடிக்கல் சயின்ஸ் என்னைக்கும், அனிச்சையாகவோ இல்லை வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு தடவை நடந்து உடலுக்கு பாதிப்பை தராத நிகழ்வுக்கோ பெயர் சூட்டுறதில்ல. திரும்ப திரும்ப நடந்தா மட்டும் தான் அது கவனிக்க ஆரம்பிக்கும். நரம்பா இல்லை மூளையா அதுவும் இல்லை இரண்டும் சேர்ந்த மனமான்னு பிரிக்க ஆரம்பிக்கும். புதுசா இருந்தா பெயரச் சூட்டும். அப்புறம் மருந்துகள தயாரிக்க தேவையான அத்தனை அம்சங்களையும் பதிய ஆரம்பிக்கும். மருந்துகள்ன்னு சொல்லிட்டு வர்ரத வைச்சு மருத்துவத்தை ஆரம்பிக்கும். உங்க விசயம் கொஞ்சம் வித்தியாசமா மட்டுமில்ல புதிராவும் இருக்கு. ஒரே ஒரு நிகழ்வை மட்டும் மறந்திருக்கு. ஒருவேள உங்களால கவனிக்க முடியாத வேகத்துல நடந்திருந்தா அத மெடிக்கல் சயின்ஸால கண்டுபிடிக்க முடியாது. வேற ஏதாவது ஒரு சயின்ஸ வச்சுத்தான் அனலைஸ் பண்ணனும். முடிஞ்சளவு உங்கள சுற்றி நடக்கிற விசயங்கள பதிய ஆரம்பிங்க. மீண்டும் இதமாதிரி ஒரு நிகழ்வு நடந்தா உங்களோட வார்த்தைகளோட பதிவையும் பார்த்துட்டு ஒரு முடிவு எடுக்கலாம் என்று தன்னுடைய சற்று நீளமான உரையை முடித்தார்.
ராஜாவுக்கு அவருடைய உரை கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. வந்ததும் வராததுமாக, பதிவிற்கு தேவையான அனைத்தையும் செய்ய ஆரம்பித்தான். வீட்டில் உள்ள அனைவரும் இது வேண்டாத வேலை. ஆயிரம் ரூபா காணம போனதுக்கு இதுவரை ஐயாயிரம் செலவு பண்ணியாச்சு. இப்ப என்னடான்னா எல்லாத்தையும் பதிய போறேங்கிற, ஏண்டா இப்படி செலவு பண்ணுறன்னு அறிவுரையை பொழிந்தனர். ஆனால் ராஜாவுக்கு மீண்டும் அது போல் ஒரு நிகழ்வு நடந்தால் அது ஆராயப்பட வேண்டும் என்பதில் விலக விருப்பம் இல்லை. காலமும் பருவமும் கடந்து கொண்டிருந்தது. அன்று காலையிலும் காற்றும் வேகமாக வீசிக் கொண்டிருந்தது. மொட்டைமாடியும் குதிரைவாலும் வழக்கம் போல் பார்த்துக் கொண்டிருந்தன. குக்குறுவான் கத்திக் கொண்டிருந்தது. மேலும் ஐந்து வருடத்தை கடந்த அவனது உடலும் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. செலவு பண்ணியதற்காகவாது ஒரு முறை நிகழாதா என்ற ஏக்கம் அவனைச் இன்றும் சுற்றிக் கொண்டிருந்தது. உலகம் எப்பொழுதும் போல் சூரியனைச் சுற்றிக் கொண்டிருந்தது.