ஆட்டம் நீரோட்டம்

கோடைக்கு வியர்வையை உடலுடுக்க
குறைகண்ட விழிகளும் சிறகடிக்க
உடுப்பும் உடலுடன் பயணிக்க
காற்றுடன் வெயிலும் கலந்தடிக்க
மெலிந்தவள் விரிந்து நிலமணைக்க
மனதும் உடலும் குளிர்ந்த
நீரும் கொதிக்கும் மணலும்
பாய்ச்சலும் நீச்சலும் சுழன்றுவிட
தென்னங் கீற்றைபோல மிதந்துவிட
சிறகடித்த விழிகளும் சிவந்துவிட
உள்ளும் புறமும்கறை களைந்துவிட
ஒட்டத்தில் ஆட்டம் களைத்துவிட
மனதும் உடலும் மலரும்தளிரும்

செயலும் வினையும்

தனிமைக்கும் தவிப்புக்கு முரும்பாத நட்பு-அரும்பும்
அனிச்சையால் விளையும் பயங்களுக்கு
கடவுளை வேண்டாத பகுக்குமறிவும் பிறர்வழியடையும்
கடக்கும் வேண்டாத வினைகளுக்கு
கறையல்லது குறை குரை இல்லைகரை
தா(கா)கம் வரும் வரை

காலம் கடந்தன

ஊட்டிய கைகளும் தாங்கிய தோள்களும் வளர்த்துவிட்டன
தளர்ந்த நடைகளாய் சுருங்கிய தோல்களாய் தேய்ந்துவிட்டன
நினைவுகளே உறவுகளாய் நித்திரையே உலகமாய் ஓய்ந்துவிட்டன
அறையிலே படங்களாய் அதன்கீழ் விளக்காய் ஓளிர்ந்துவிட்டன
கண்ட கண்களும் உள்ளிருந்த அந்நீரும் தனித்துவிட்டன

மீண்டுமொரு அத்தியாயம்

உதவும்கைகளும் உறவின்முறைகளும் நிலைபெறவேண்டி
சப்தமயங்கும் சங்கமியங்கும்
நினைக்கின்றமனதும் நீண்டகாலமும் உடன்வரவேண்டி
உரியவர்பொருளும் ஊரறியுபெயரும்
உறவினர்களுதவ உறவுகள்கூடும் அருள்பெறவேண்டி
நம்பிக்கைவிதைகளும் நலமுடன்வளரும்
அடிப்படையறிவும் அனுபவபார்வையும் வருந்தடைதாண்டி
தலையெடுத்தெழுதும் தலைமுறையிலிருக்கும்

வண்டடையும் மலர்வனம்

கதிர்கள் இருப்பதில் பாய்ந்ததைப்போல்

தளிர்கள் பாய்வதில் மிதந்ததைப்போல்

சிறகுகள் மிதப்பதில் பறந்ததைப்போல்

பாய்ந்து பறந்து உட்புகுந்ததேன்

வியந்து விரைந்து உள்ளடைந்ததேன்

எடுத்து தொடுத்து வெளிவந்ததேன்

காட்டில் ஓரானை

அன்று
ஞாயிறும் தயங்கியெழ
நானுமதில் மயங்கிவிழ
வண்ண மலர்களும் அசையாமலிருந்துவிட
வண்டாய் கண்களும் ஆசையாலுருமாறிவிட
சிறகையவள் விரித்துவிட இலைகளை அணைத்துவிட
மேனியும் மறைந்துவிட மேற்கில் தெரிந்துவிட
வாசகமும் அலையா யெழுந்துவர
வாசகரும் சிலையா யிருந்துயெழ
நனைந்து வணங்கிவிட
நினைவில் பதிந்துவிட
நன்று

என்றும் பூவாடும்

கனியுமென்னை கொய்தவரில்லை
கொய்தவரென்னை தொடுப்பதுண்டு
தொடுத்தவரென்னை அடைப்பதில்லை
அடைப்பதிலென்னை விற்பதுண்டு
விற்பவரென்னை அரிந்ததில்லை
அறிந்தவரென்னை அணிவதுண்டு
அணிந்தாலென்னை இயல்மூடவில்லை
இயல்பென்றுமென்னை வா(ஆ)டவிடுவதுண்டு
—————————————————

பொழுதுபோக்கு

புகையும் படமும் காட்ட
இசையும் கவிதையை மீட்ட
வாரமொருமுறை வலசைவரும்
வரம் வாங்கிய ஓர்புள்

ஊர்ப் புராணம்

பனையும் பாறையும் சூழ்ந்து நின்ற
தென்னையும் குன்றையும் திசையெங்கும் கண்ட
மண்(ஐ,) மணம் கொண்ட
சித்திரைப் பெண் ஆண்ட
அந்த ஊர் எந்தன் ஊர்!

கதிரவன் தழுவுமொர் சிலை

கவியெழுந்து விழிகளில்பாடி விரல்களாடி
வடித்தார்கள் உன்னையன்று
மதியிருந்தும் விழிகளைமூடி விரல்கள்கூடி
படிகிறார்கள் உன்னையின்று
தெரிந்ததன்று திரிந்ததின்று தெரிந்தால் நன்று