இரவும் வரும் பகலும் வரும்

நாட்களில் திறந்திடும் அணைகள்
நடந்தசைந்து வரும் நீர்துளிகள்
விலையேற காத்திருக்கும் உரங்கள்
விரைந்து கலந்திடும் கழிவுகள்
எடுத்து குடித்திடும் நகரங்கள்
ஏக்கத்தில் காய்ந்திடும் வயல்கள்
வாடிக்கையென கடந்திடும் வருடங்கள்
வார்த்தைகளை மாற்றின கவிதைகள்

02/10/2016

வண்டலும் உருண்டு வரும்
கற்களும் பெருத்து வரும்
மேனியை குளிரூட்ட வரும்
வண்டியை மெருகூட்ட வரும்
அப்புறம் பயிராக்க வரும்
எத்தனை நாட்கள் வரும்?

20/09/2015

 

 

வண்டடையும் மலர்வனம்

கதிர்கள் இருப்பதில் பாய்ந்ததைப்போல்

தளிர்கள் பாய்வதில் மிதந்ததைப்போல்

சிறகுகள் மிதப்பதில் பறந்ததைப்போல்

பாய்ந்து பறந்து உட்புகுந்ததேன்

வியந்து விரைந்து உள்ளடைந்ததேன்

எடுத்து தொடுத்து வெளிவந்ததேன்

காட்டில் ஓரானை

அன்று
ஞாயிறும் தயங்கியெழ
நானுமதில் மயங்கிவிழ
வண்ண மலர்களும் அசையாமலிருந்துவிட
வண்டாய் கண்களும் ஆசையாலுருமாறிவிட
சிறகையவள் விரித்துவிட இலைகளை அணைத்துவிட
மேனியும் மறைந்துவிட மேற்கில் தெரிந்துவிட
வாசகமும் அலையா யெழுந்துவர
வாசகரும் சிலையா யிருந்துயெழ
நனைந்து வணங்கிவிட
நினைவில் பதிந்துவிட
நன்று

பொழுதுபோக்கு

புகையும் படமும் காட்ட
இசையும் கவிதையை மீட்ட
வாரமொருமுறை வலசைவரும்
வரம் வாங்கிய ஓர்புள்